காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு கோவிலுக்கு வந்து நளத்தீர்த்த குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு செல்கின்றனர்.

இங்குள்ள நளத்தீர்த்த குளத்தை கோவில் நிர்வாகம் வாரம் தோறும் சுத்தம் செய்து தண்ணீரை மாற்றி பக்தர்கள் குளிப்பதற்கு ஏதுவாக சரி செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திருநள்ளாறு பகுதியில் யாசகம் பெற்று வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குளத்தில் குளிப்பதற்காக சென்றபோது படிகளில் இருந்த பாசி வழுக்கி குளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் திருநள்ளாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.