மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். கூட்டத்தில் 97-வது வார்டு கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் தனது வார்டுக்கு உட்பட்ட கோட்டை அரசு ஆரம்ப பள்ளியில் குடிநீர் வசதி இல்லாமல் மாணவ- மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதியை நிறைவேற்ற வேண்டும். ஓம் சக்தி நகரில் கட்டப்பட்டு உள்ள பொதுக் கழிவறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
94-வது வார்டு கவுன்சிலர் ஸ்வேதா சத்யன் திருநகர் பகுதியில் சாலை, தெரு விளக்கு, கழிவுநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். மேலும் வார்டில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு போதுமான கவச உடைகள், கையுறைகள் இல்லை. எனவே அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். 93-வது வார்டு பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கவுன்சிலர் ரவிச்சந்திரன் வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு இடங்க ளில் குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்களும் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர், கோரிக்கை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.