தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இருந்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இதனால் மாவட்டந்தோறும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு அதை விற்பனை செய்பவர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதுபோல் தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கவும், அதை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேனி கலெக்டர் ஷஜீவனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில், கலெக்டர் ஷஜீவனா உத்தரவின்படி சின்னமனூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ் கண்ணன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் செயற்கை சாயம் சேர்க்கப்பட்ட உணவு வகைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கிளாஸ், கேரிபேக்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.