• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

லைட்டர்களுக்கு தடை, கடன்கள் வட்டியுடன் தள்ளுபடி: திருச்சி சிவா பேச்சு

ByBala

Apr 14, 2024

விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருச்சி சிவா, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சீன தயாரிப்பு லைட்டர்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக சிவகாசியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பட்டாசு தொழிலை மாசு கட்டுப்பாடு என்ற பெயரில் முழுமையாக முடக்கியது. பாஜக ஆட்சியில் தான் ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சீன பட்டாசுகளுக்கு தடை விதித்து இந்தியாவில் குறிப்பாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற நிலை உருவாக்கப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தீப்பெட்டி தொழிற்சாலை நலிவடைய காரணமாக உள்ள சீனாவிலிருந்து இறக்குமதியாகும் லைட்டர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும், பாஜக இன்று அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதியில் யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரவில்லை, கடந்த காலத்தில் ஏதோ சாதித்ததாக பெரிய பட்டியல் மட்டும் உள்ளது என்றார்.

மேலும், இந்தியா கூட்டணி ஆட்சிக்கும் வந்தால் விவசாய கடன், கல்வி கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும். மோடி கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் 108 முறை பெட்ரோல் டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்தியுள்ளார். இந்த விலையை உயர்த்தியதன் மூலம் மோடி அரசிற்கு கிடைத்த வருமானம் ஏழே முக்கால் லட்சம் கோடி ரூபாய், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றதன் மூலம் நாளரை லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

ஏழை எளிய மக்களிடம் கடன் செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கும் மத்திய அரசு வங்கி நிறுவனங்கள் பணக்காரர்களுக்கு பத்தாயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ஒரு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என மோடி சொல்லி இருந்தார், ஆனால் தற்போது மட்டும் 4 கோடி பேருக்கு மேலான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர் என்றார்.