விருதுநகர் மாவட்டத்தில் விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி,சின்ன பேராலி,பாண்டியன்நகர்,ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர்,நாடுமுழுவதும் பாஜக தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்;வெற்றிபெறும் கட்சியின் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுத்தால் எல்லா மக்கள் நலத்திட்டங்களும் எளிமையாக மக்களை வந்தடையும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வளம்,வளர்ச்சி,வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும்,இடைத்தரகரே இல்லாமல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கொடுத்து வருவதாகவும்,இங்குள்ள குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பது தான் தம் முதல் கடமை என்றும் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசை பாதுகாக்க மத்திய அரசு தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும்,இங்கு விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பேசினார்.