சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை எதிர்த்து இன்று கருப்பு துண்டு அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில், சண்முகம் சாலை மசூதியில் இருந்து பேரணி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், திராவிட கழக மாவட்ட தலைவர் முத்தையன் உள்ளிட்ட தமுமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யாக்கூப் கூறுகையில், “தமிழகம் முழுவதும் டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாளில் போராட்டம் நடைபெறுகிறது. ஜனநாயகத்தை பாதிக்கும் SIR சட்டம் வாபஸ் பெறப்படவேண்டும். வணக்க வழிபாட்டு வக்ஃப் வாரியச் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது. 1991-ல் இயற்றப்பட்ட வணக்க வழிபாட்டு சட்டம் அதேபடி அமல்படுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தார்.




