• Sat. Mar 22nd, 2025

அயோத்தி ராமரை தரிசிக்க நாளை முதல் அனுமதி..!

Byவிஷா

Jan 22, 2024

அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றுள்ள நிலையில், ராமரை தரிசிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் இன்று மிக கோலாகலமாக பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள 7000க்கும் அதிகமான விவிஐபிக்கள் வருகை தந்திருந்தனர். விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோவில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலத்தில் வண்ணமயமாக காட்சி அளித்தது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற இன்று பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பக்தர்கள், பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அயோத்தி பால ராமரை பக்தர்கள் நாளை ஜனவரி செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் தரிசிக்கலாம். காலை 6.30 மணி மற்றும் இரவு 7.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் அப்டேட் செய்த பிறகு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.