இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களை எம்.பி. ஆர்.ராசா நேற்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், செருதூர் மற்றும் அக்கரைப்பேட்டை பகுதிகளிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்பாலான பொருள்களை பறித்துச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த நமது மீனவர்களை உடனடியாக நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி மீனவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியும், நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளோம். மருத்துவமனையில் மீனவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைப் பெற்று வரும் மீனவர்கள் அனைவரும் ஒரு சில நாள்களில் வீடு திரும்புவார்கள். இந்த சந்திப்பின்போது, மீனவர்கள் தாக்குதல் தொடர்பான மனகுமுறல்களை தெரிவித்துள்ளனர்.
அதனை முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் இந்திய இலங்கை கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க பிரதமர் மற்றும் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும். இதற்காக மாநில பங்களிப்பு தேவையிருப்பின் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். பாதுகாப்பு விவகாரத்தில் முழு அதிகாரம் ஒன்றிய அரசிடம் உள்ளது. தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் இலங்கை அரசால் மூழ்கடிக்கப்படவுள்ளதாக தகவல் வருகிறது.
இதை தடுக்க பாராளுமன்றத்தில் திமுக சார்பில் குரல் கொடுக்கப்படும். மீனவர்களை பாதுகாக்க போதிய பாதுகாப்பு வலையம் ஏற்படுத்த ஒன்றிய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என்றார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.