• Mon. May 6th, 2024

அதியமான்கோட்டை நியாயவிலைக்கடையில்..,கேழ்வரகு வழங்கும் திட்டம் தொடக்கம்..!

Byவிஷா

Jun 13, 2023

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் கேழ்வரகு வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக அதியமான்கோட்டை நியாயவிலைக்கடையில் இன்று தொடங்கி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கேழ்வரகு வழங்கும் திட்டம் தற்போது ஒவ்வொரு மாவட்டமாக படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தை பொருத்தமட்டில் கூட்டுறவு துறை சார்பாக கிராம நகர்புறங்களில் 456 நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக 32 முழு நேர நியாய விலை கடைகள், 10 பகுதி நேர நியாய விலை கடைகள் என மொத்தம் 1082 நியாய விலை கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்தின் பேரில் 18 கிலோ அரிசி இரண்டு கிலோ கேழ்வரகு என 20 கிலோ உணவு பொருள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில் அதியமான் கோட்டை நியாய விலை கடையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
இதில் பேசிய அமைச்சர் கூறியதாவது..,
தமிழக முதல்வர் வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் சிறுதானிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடையும் விதமாக பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இரண்டு கிலோ அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க வசதியாக நேரடி கொள்முதல் நிலையம் கடந்த ஜனவரி 21ஆம் தேதி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வசதியாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *