• Mon. May 20th, 2024

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்ப பெற அஸ்ட்ராஜெனகா நிறுவனம் முடிவு

Byவிஷா

May 9, 2024

உலகம் முழுவதும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தியதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவ்வூசியை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 68 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கின. அவற்றில் இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் ஆக்ஸ்போர்ட்டு பல்கலைக் கழகமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உயிரிழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்காக அந்நிறுவனம் 100 மில்லியன் பவுண்டுகள் இழப்பீடு தரக் கோரியும் இங்கிலாந்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் சிலருக்கு அரிதினும் அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுகள் குறைவு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டதாலும், சந்தையில் தேவைக்கு அதிகமாகவே பல்வேறு கொரோனா தடுப்பூசி உள்ளதாலும் எங்கள் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *