விதிகளை மீறி தள்ளுபடி பெற்ற 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை.
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கடந்த 2021 மார்ச் 31 வரை 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் 14 லட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டதில் விதிகளை மீறி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள், மத்திய- மாநில அரசு பணியாளர்கள், ஓய்வூதியர்கள் என 37,984 பேர் பயன் அடைந்திருந்தனர். இது தற்போதைய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு விதிகளை மீறி நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பட்டியல் தற்போது புள்ளி விவரத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் விதிகளை மீறி தள்ளுபடி பெற்றவர்களின் நகைக்கடன்களை திரும்ப வசூலிக்குமாறு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 37,984 பேரின் நகைக்கடன்களை வசூலிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் மொத்தம் ரூ.160 கோடி பறிமுதல் செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தகுதியற்ற பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் அதனை ரத்து செய்வதற்கான உத்தரவை உடனே பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.