• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சிபிஐ வசம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… சிக்கப் போகும் முக்கியப் புள்ளிகள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

 பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை  கடந்த 2024 ஆம் வருடம் ஜூலை 5 ஆம் தேதி மாலை மர்ம கும்பல் ஒன்று சென்னை பெரம்பூரில் இருக்கும் அவரது வீட்டு அருகே சரமாரியாக வெட்டிக்கொன்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங்  கொடூரமான தாக்குதலால் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  தமிழக போலீஸார் பல்வேறு தனிப் படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினார்கள். ஆனால் ஒரு வருடமாகியும் கூட சந்தேகத்துக்குரிய பலரை கைது செய்தாலும் கூட ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மோட்டிவ் என்ன என்பது பற்றியும், இது யாருடைய ஸ்கெட்ச் என்பது பற்றியும் தெளிவான முடிவுக்கு போலீஸாரால் வரமுடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் இந்த விவகாரத்தில்  முக்கிய அரசியல் புள்ளிகள் சிலரின் பெயர்களும் அடிபட்டது.  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி டெல்லியில் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்து, ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம் குறித்து 45 நிமிடங்கள் பேசி சில முக்கிய கோரிக்கைகளையும் வைத்தார் என்று அப்போதே செய்திகள் வந்தன.

சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல சில அரசியல் புள்ளிகளின் அண்டர்கிரவுண்ட் தாதாதனம் பற்றியும் பல தகவல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையை ஒட்டி விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில்தான்…  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்றியுள்ள உயர் நீதிமன்றம்,  அரசியல் தலையீடு எதுவும் இல்லாமல் பாரபட்சமின்றி  6 மாதங்களில் விசாரித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென கூறியுள்ளது.  

இந்த வழக்கில் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன், ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அஞ்சலை, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 10 வழக்கறிஞர்கள், பெண்கள் என மொத்தம் 27 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

 ரவுடி திருவேங்கடம் என்பவர் போலீஸாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீஸார் கடந்த ஓராண்டாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது செம்பியம் போலீஸார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தற்போது இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த சூழலிதான், தமிழக போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை  நேர்மையாக விசாரிக்கவில்லை என்று அவரது சகோதரர்
சகோதரர் கீனோஸ்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில்,   “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எனது சகோதரரின் படுகொலை வழக்கை செம்பியம் போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. இந்த கொலையில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. கொலையில் தொடர்புடைய சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை பிடிக்க தமிழக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என்று கோரினார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்து வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ்,  “இந்த வழக்கில் உடனடியாக 27 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.  விசாரணை சரியான கோணத்தில் தான் நடந்து வருகிறது” என்று வாதங்களை எடுத்து வைத்தார்.
ஆம்ஸ்ட்ராங் சகோதரருக்காக  ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா,  “இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகவுள்ள ரவுடி நாகேந்திரனுடன் நெருக்கமாக இருந்த தமிழக காங்கிரஸில் முக்கிய பொறுப்பில் உள்ள தலைவரிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்த வழக்கில் கைதான திருவேங்கடம் ஏன் என்கவுன்டர் செய்யப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது.  குறித்தும் போலீஸார் தெளிவுபடுத்தவில்லை. பல உண்மைகளை மறைத்து போலீஸார் அவசரகதியில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என அழுத்தமாக கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு  வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பை  செப்டம்பர் 24 ஆம் தேதி அளித்தார் நீதிபதி வேல்முருகன்.

“ இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிடுகிறேன்.  சிபிஐ அதிகாரிகள் அரசியல் குறுக்கீடோ, ஊடக குறுக்கீடோ இல்லாமல் சுதந்திரமாக விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.
இந்த உத்தரவு தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் சிபிஐ இவ்வழக்கில்  சில அரசியல் தலைவர்களை விசாரித்தால் அது அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.