திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டுவருகிறது.
இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிகஅளவிலான பயணிகள் பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு 176 பயணிகளுடன் புறப்பட்டு ரன்வே வரை சென்றது.

அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானம் விமான நிலைய முனைய வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டு, பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் அந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யமுடியாதநிலை இருந்து வருகிறது.
இதனால் விமானத்தில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் அவதியை சந்தித்துவரும்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அடுத்தகட்ட ஏற்பாடுகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டுவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து பயணிகளுக்கும் விமான நிறுவனத்தினருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.




