
மதுரை மாவட்டம், தோப்பூரில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கு அனுமதி கோரி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
கடந்த 2018ல் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடி மதிப்பில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் இந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த கட்டுமான பணிகளுக்கான திட்ட மேலாண்மை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இருந்த போதிலும், எப்போது தொடங்கப்படும் என்ற தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. இதனால் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளானது மதுரை எய்ம்ஸ். இந்த நிலையில், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. சுமார் 221 ஏக்கர் பரப்பளவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குள் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், அவரச சிகிச்சைப் பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
