• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

சட்டமன்ற மரபுகளை ஆளுநருக்காக மாற்றமுடியாது… கொந்தளித்த அப்பாவு!

ByP.Kavitha Kumar

Jan 6, 2025

ஆளுநர் சொல்வதற்காக சட்டமன்ற மரபுகளை எல்லாம் மாற்றமுடியாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் அவை துவங்குவதாக இருந்தது. இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு பூங்கொத்து அளித்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் பாடப்படாததால், வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. ஆளுநர் வெளியேறிய பிறகு அவை முன்னவரான துரைமுருகன் அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில் முந்தைய ஆண்டுகளில் ஆளுநர் வெளியேறிய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார். தேசிய கீதம் குறித்த சர்ச்சை குறித்தும் விளக்கமளித்தார்.

அப்போது துரைமுருகன் பேசுகையில், ஆளுநர் குறிப்பிட்டு, உரையை படிக்காமல் சென்றது அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது. இந்த நாட்டின் மீதும் தேசிய கீதத்தின் மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும் இந்தப் பேரவையும் கொண்டிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் என்றும் மாறாத நன்மதிப்பைக் கொண்டது இந்த அரசு” என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் நாளை (ஜனவரி 7) காலை ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. வரும் 11-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறுகையில், ” அண்ணா பல்கலை. வேந்தரும் ஆளுநருமான ரவி பேச எழுந்தபோது அதிமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். அண்ணா பல்கலை. வேந்தரான ஆளுநரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்களா என்று தெரியவில்லை. கலவர நோக்கத்துடன் அதிமுகவினர் செயல்பட்ட காரணத்தால் வெளியேற்ற உத்தரவிட்டேன். இதுவரை எந்த ஆளுநரும் இப்படிப்பட்ட பிரச்சினையை உருவாக்கியதில்லை. மேலும் உரையாற்ற வரும் ஆளுநருக்கு பேரவையில் கருத்து சொல்ல அனுமதி இல்லை. ஆளுநர் உரையாற்றும் நாள், சட்டப்பேரவை நடந்த நாளில் கூட கணக்கில் வராது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் கொடுத்த உரையை ஆளுநர் வாசிப்பது சம்பிரதாயம். தன்னை எதிர்த்து ஜெயலலிதா அரசு நிறைவேற்றிய தீர்மானத்தையும் சேர்த்து வாசித்துவிட்டுச் சென்றார் அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி. தேசிய கீதம் முதலில் பாடததால் உரையை வாசிக்கவில்லை என்று ஆளுநர் சாக்குபோக்கு சொல்கிறார் என்று கருதுகிறேன். தமிழ்நாடு அரசின் உரையை படிக்க ஆளுநருக்கு விருப்பம் இல்லை. சட்டமன்றத்துக்கு என்று ஒரு மரபு உள்ளது.

ஆளுநர் உரையாற்ற வரும்போது இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று நடைமுறை ஏதாவது சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளதா? 1920-ல் சென்னை மாகாண சட்டப்பேரவை கூடியது முதல் இருக்கும் மரபே தற்போதும் பின்பற்றப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்ற பிரச்சினை இல்லை. ஆளுநர் சொல்வதற்காக சட்டமன்ற மரபுகளை எல்லாம் மாற்றமுடியாது. விதிமீறல், சட்டமீறல்கள் எல்லாம் ஆளுநர் மாளிகைக்கு கைவந்த கலையாக உள்ளது. இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலாவது இதுபோன்ற பிரச்சினை இருக்கிறதா? அரசியல் சட்டம் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது, தமிழ்நாட்டு ஆளுநர் பொதுவெளியில் பேசும்போது மதசார்புள்ள நாடு என பேசுகிறார். இந்தியா மதசார்புள்ள நாடு என்று பேசும் ஆளுநர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.