கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்தனர்.
கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி :-

“இன்றைய ஊழல் ஆட்சியில் தி.மு.க இருக்கக் கூடாது என்று மக்கள் முடிவு செய்து விட்டனர். கோவைக்கு எந்த பெரிய திட்டமும் வந்ததாக தெரியவில்லை. தி.மு.க சாதனைகள் பத்திரிக்கை விளம்பரங்களில் மட்டுமே உள்ளது. எந்தப் பணியும் செய்யாமல் ஐந்து ஆண்டுகளை தி.மு.க அரசு கழித்து விட்டது,” என்றார்.
மேலும், “தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பால் விலை முதல் சொத்து வரி வரை அனைத்தும் உயர்ந்து உள்ளது. வீட்டு மளிகைப் பொருட்களின் விலை பட்டியலை கணக்கிட்டு பார்த்தால் மக்களின் சுமை தெரியும். பெண்களுக்கான நிதி 28 மாதமாக வழங்கப்படாதது ஏன்? ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ரூ.4 லட்சம் வசூலித்த பிறகே ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளனர்,” என குற்றம்சாட்டினார். கோவை மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை :-
“தமிழகத்தில் எங்கு தெருமுனை பிரச்சாரம் நடந்தாலும் தொண்டாமுத்தூரில் காணும் அளவிற்கு கூட்டம் இல்லை. இந்த தொகுதி அ.தி.மு.க வின் கோட்டையாக உள்ளது. கல்வி மூலம் மட்டுமே ஏழைகள் முன்னேற முடியும்,” என்றார்.
விளாத்திகுளம் பகுதியில் மாணவி காணாமல் போன விவகாரத்தில் காவல்துறை அலட்சியம் காட்டியதாகவும், மாணவி உயிரிழந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், “மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடிய முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். ரூ.5 ஆயிரம் கிடைத்ததால் மட்டும் தாய்மார்கள் வாக்களிக்க மாட்டார்கள். யார் ?ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை தாய்மார்களே தீர்மானிப்பார்கள்,” என்றார்.
தி.மு.க ஆட்சியில் அடிப்படை வசதிகள் கிராமங்களுக்கு வரவில்லை என்றும், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான குற்றச் சம்பவங்கள் நடந்து உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், கோவையில் மீண்டும் 10 தொகுதிகளையும் அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றும் என்றும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை வாய்ப்பை 150 நாளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



