• Fri. May 3rd, 2024

உசிலம்பட்டி பணிமனையில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதம்..!

ByP.Thangapandi

Jan 9, 2024
உசிலம்பட்டியில் ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளை பணிமனையிலிருந்து எடுத்து செல்வதாக குற்றம் சாட்டி - பேருந்துகளை எடுத்து செல்ல வரும் ஓட்டுநர்களுடன் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் உள்ள 94 பேருந்துகளில் தினசரி 68 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் காலை 5 மணி முதல் 7 மணி வரை சுமார் 42 பேருந்துகள் தொ.மு.ச தொழிற்சங்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களால் இயக்கப்பட்டு வருகிறது.
இதே போல் செக்காணூரணி போக்குவரத்து பணிமனையில் உள்ள 48 பேருந்துகளில் தினசரி 40 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் 7 மணி வரை சுமார் 33 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து அதிகப்படியான பேருந்துகள் வெளியேறிவிட்டது என கணக்கு காட்டுவதற்காக ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளை பணிமனையிலிருந்து எடுத்து செல்வதாக குற்றம் சாட்டி, போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்தை எடுத்து செல்ல வந்த ஓட்டுநர்களுடன் மற்றும் பணிமனை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை எடுத்து செல்ல வைத்தனர்.
அண்ணா தொழிற்சங்கத்தினர் இது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள் என்று அஞ்சியே ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளை, பேருந்து நிலையத்திற்கு எடுத்து வந்து தருமாறு கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், ஒரு சில தொ.மு.ச ஓட்டுநர்கள் எடுத்து செல்லும் பேருந்துகள் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு மாற்று ஓட்டுநர் அந்த பேருந்துகளை இயக்கி வருவதாக போக்குவரத்து மேலாளர் முகமது ராவுத்தர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *