• Fri. Apr 26th, 2024

ஆண்டிபட்டி செவிலியர் கொலை வழக்கு முடிவுக்கு வந்தது.விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மருத்துவ பணியாளர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் செல்வி(45). இவர் கடந்த மாதம் 24ந்தேதி ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். செவிலியர் செல்வியுடன் தொடர்பில் இருந்தவர் களை பிடித்து விசாரணையில் நடத்தினர். ஆனால் கொலை சம்பவம் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்

. இதனையடுத்து இந்த வழக்கை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வெவ்வேறு கோணங்களில் விசாரிக்கும்படி போலீசாருக்கு தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவிட்டார்.


இதனையடுத்து செவிலியர் கொலை வழக்கு விசாரணைய முடுக்கி விட்டனர். செல்வியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களை இந்த மாதம் 10ந்தேதி போலீசார் மீண்டும் விசாரணைக்கு அழைத்தனர். அப்போது தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த ராமச்சந்திரபிரபு(34) என்பவரையும் அழைத்தனர். இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்தார்.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணைக்கு நாளைக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அடுத்த நாள் காலை அதாவது 11&ந்தேதி மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபு உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துக்காடு பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ராமச்சந்திரபிரபு மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரபிரபு குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் ஆண்டிப்பட்டி செவிலியர் செல்வியை கொலை செய்தது மருத்துவ பணியாளர் ராமச்சிந்திரபிரபு தான் என்பதை தற்போது போலீசார் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,

செவிலியர் கொலை வழக்கு குறித்து மருத்துவபணியாளர் ராமச்சந்திரபிரபுவிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆரம்பத்தில் இருந்தே அவர் முன்னுக்கு பின் முரணாக பேசிவந்தார். செல்வியிடம் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளார். இதன்காரணமாக கடந்த 11ந்தேதி விசாரணைக்கு வரும்படி அழைத்து இருந்தோம்.

ஆனால் அவர் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட செல்வியும், மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றிய போதும், இவர்களுக்கிடையேயான உறவு நீடித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் செல்விக்கு லட்சக் கணக்கில் பணம் கடன் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது.

பல்வேறு இடங்களில் கடன் வாங்கி கொடுத்ததால் ராமச்சந்திரபிரபுக்கு கடன் பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் செல்வியிடம் கொடுத்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் செல்வி பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் ஆண்டிப்பட்டி வந்த ராமச்சந்திரபிரபு, செவிலியர் செல்வியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பமாக மாறியுள்ளது. அந்த சண்டையில் ராமச்சந்திரபிரபு தாக்கியதில் செல்வி இறந்துள்ளார்.

அதன்பின்னர் சுமார் 3.40 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி அவர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலிச் செயினையும் எடுத்து கொண்டு சென்றுள்ளார். ராமச்சந்திரபிரபு வந்து சென்றது, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையும் ராமச்சந்திரபிரபுவின் கைரேகையும் ஒத்து போகிறது. மேலும் ராமச்சந்திரபிரபு தான் செல்வியிடம் கடைசியாக போனில் பேசியுளளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் செல்வி கொலை செய்யப்பட்டதற்கு பின்னர் அவரது 3பவுன் தாலிச் செயினை தேனி, பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ராமச்சந்திரபிரபு அடகு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.இதனையடுத்து செவிலியர் செல்வியின் கொலை வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *