விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. 108 வைணவத் தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூராகும். லட்சுமி தேவியின் அம்சம் ஆகிய ஸ்ரீஆண்டாள் மானிட பெண்ணாக பிறந்து பூமாலை சூட்டி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். இங்கு ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத் திருவிழா மிக வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த வருடத்திற்கான ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இன்று கொடியேற்றத்துடன் துவங்கிய ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் திருநாள் 24ஆம் தேதி கருட சேவையும், 26ஆம் தேதி சயன சேவையும் நடைபெறும்.முக்கிய நிகழ்வான திரு ஆடிப்பூர தேரோட்டம் 28ஆம் தேதி நடைபெறுகிறது. திருவிழா நடைபெறும் எட்டு நாட்களும் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
முன்னதாக இன்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில் கொடி மரத்தில் மீது ஏறி நின்று கொடி பட்டத்தை கொடிமரத்தில் சுற்றுவது தொடர்பாக பட்டர்கள் மற்றும் பரிசாகர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கொடிமரத்தில் புல் கட்டுகள் வைத்து கொடி பட்டம் சுற்றப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்ற விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னாரை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. ஆடிப்புரத் தேரோட்ட விழாவிற்காக தினம்தோறும் காவல் துணை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் 50க்கு மேற்பட்ட போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
