இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு, மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் மட்டுமே தற்போது போடப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும், அரசால் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களிலும் கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவோவேக்ஸ் தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்த முக்கியத் தகவல்களை காணலாம்.
இந்த கோவோவேக்ஸ் தடுப்பு மருந்து அமெரிக்காவின் நோவாவேக்ஸின் உரிமத்தின் கீழ் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட்டால் தயாரிக்கப்படுகிறது.
இந்த தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் கொடுத்திருப்பதன் மூலம் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளின் தடுப்பு மருந்து தேவையை இது பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவோவேக்ஸுடன் சேர்த்து இதுவரை ஒன்பது தடுப்பு மருந்துகளுக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவோவேக்ஸ் அவசர பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19க்கு எதிரான நமது போராட்டத்தில் இது மற்றொரு மைல்கல்” என சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் மரியாங்கெலா சிமோ, “குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் தடுப்பு மருந்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுவரை 41 நாடுகள் மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குதான் தடுப்பு மருந்து செலுத்தியுள்ளது. பிற 98 நாடுகளில் 40 சதவீதத்தைகூட தாண்டவில்லை” என்றார்.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவேக்ஸ், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா உடன் 200 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
அடுத்த செப்டம்பருக்குள் இந்தியாவில் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசி சந்தைக்கு கொண்டு வரப்படலாம் என நம்பிக்கை தெரிவித்திருந்தார் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா.
நோவாவேக்ஸ் நிறுவன தடுப்பூசி மீதான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே, இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் உலக தரவுகளின் அடிப்படையில், சீரம் நிறுவனம் உற்பத்திக்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அப்போது தெரிவித்திருந்தார் அதார் பூனாவாலா.
நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இரண்டு டோஸ்களைக் கொண்டது.
இது கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளர்கள் மத்தியில் 91 சதவீதம் செயல் திறனும், மிதமான மற்றும் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பதில் 100 சதவீதம் செயல் திறனும் கொண்டிருப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.