சென்னையில் இருந்து நேற்று இரவு 7.05 மணிக்கு, பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாமதமாக இரவு 7.50 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 160 பயணிகள்,5 விமான ஊழியர்கள், உட்பட 165 பேர் இருந்தனர்.

இந்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்டு, காஞ்சிபுரம் கடந்து வேலூர் அருகே நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை அடுத்து விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினார்.
இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், அந்த விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பி கொண்டு வந்து தரையிறக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று 8.30 மணிக்கு, மீண்டும் சென்னைக்கு வந்து அவசரமாக தரையிறங்கியது.
விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் விமானம் உடனடியாக பழுது பார்க்க முடியாததால், பயணிகளை மாற்று விமானத்தில், சென்னையில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் இருந்து 160 பயணிகள் உட்பட 165 பேருடன், பெங்களூர் புறப்பட்டு சென்ற விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு, விமானி துரிதமாக செயல்பட்டு, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பி கொண்டு வந்து தரையிறக்கியதால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த 165 பேரும் நல்வாய்ப்பாக தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருந்த 160 பயணிகளும், மாற்று விமானம் மூலமாக நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.