புதுக்கோட்டை: பார்வைத்திறன் சவால்களை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் சமூகத்தில் அவர்களின் சம உரிமை குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், புதுக்கோட்டையில் இயங்கி வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியின் சார்பில் உலக வெண்கோல் தின (White Cane Safety Day) விழிப்புணர்வுப் பேரணி சிறப்பாக நடைபெற்றது.

ஆண்டுதோறும் அக்டோபர் 15 அன்று உலகம் முழுவதும் வெண்கோல் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பா சூரிய பிரபு, பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. P. வடிவேலன் மற்றும், திருமதி சி. கீதா காவல் ஆய்வாளர் ஆகியோர் இணைந்து கொடியசைத்து விழிப்புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தனர்.

பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வரை அமைதியான முறையில் நடைபெற்றது.
பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் வெண்கோல் ஏந்தியவாறும், பார்வை மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்குச் சமூகம் அளிக்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் அணிவகுத்துச் சென்றனர்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இன்றி மிக ஒழுங்குடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியப் பெருமக்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பொதுமக்களிடையே பார்வை மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை உணர்த்தும் விதமாகவும், அவர்களின் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அமைந்த இப்பேரணி அனைவரின் பாராட்டையும் பெற்றது.




