இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் பிரதான தலமாக அமேசான் உள்ளது. இதன் வாயிலாக மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர். அவ்வப்போது, அமேசான் நிறுவனம் இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் குடியரசு தினம் வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்காக சிறப்பு பொருட்கள் விற்பனை என்ற பெயரில் அமேசான் பதிவு செய்துள்ள விற்பனை பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் அதனை புறக்கணிக்க வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இந்திய தேசியக் கொடி பதித்த டீ-சர்ட், டீ கப், கீ செயின், சாக்லேட் போன்ற பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. மூவர்ணக்கொடியை அவமதிக்கும் வகையில், அமேசான் நிறுவனத்தின் செயல் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றன.
குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக பலரும் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச டிஜிபிக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டத்தை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது எப்ஐஆர் பதிவிடுமாறு மத்தியபிரதேச அரசின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.