ஆவினில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில், அதை யாரும் மதிப்பது கிடையாது காரணம், அரசே பால் பாகெட்டுக்களை பிளாஸ்டிக் கவரில் கொடுக்கிறதே என பேசி வருகின்றனர்.. ஆனால், நீலகிரி, கொடைக்கானல் மாவட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாடுகள், உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடுமையாக நடைமுறைப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை பிளாஸ்டிக் (நெகிழி) பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், கண்ணாடி பாட்டில்களில் பால் பொருட்களை விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் சென்னையைச் சேர்ந்த சுரேந்திரநாத் கார்த்திக், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா ஆகியோர் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் தரப்பில், “பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்குப் பதிலாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத மாற்றுப்பொருட்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக” தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதைத் தடுக்க ஆவின் நிர்வாகம் நிரந்தர தீர்வை கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்த தீர்ப்பாயம், விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.
ஆவினில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு மாற்று ஏற்பாடு
