வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஒருவாரமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு வார காலத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 7 நாட்களாக குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
விடுமுறை நாட்களிலும் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படாததால் அதிருப்திக்குள்ளாகி ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் அருவிகளில் நீர் வரத்து சரியான நிலையில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயில் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அருவிகளில் நீர்வரத்து சீரானதை அடுத்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உற்சாகமுடன் பயணிகள் குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்குப் பிறகு குற்றாலத்தில் குளிக்க அனுமதி
