• Thu. Mar 27th, 2025

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

Byவிஷா

Feb 19, 2024

தமிழக சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்து வரும் நிலையில், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, திருவண்ணாமலை, தென்காசி, திருப்பூர், கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ் சமூகத்தின் காலச்சுவடுகளை தேடி கேரளா, ஓடிஸா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள தொல்லியல் சிறப்புமிக்க இடங்களில் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். இந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் நாட்டிலேயே அகழாய்வு மேற்கொள்ள பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்தார்.
தேசிய கடல் சார் தொழில் நுட்பவியல் நிறுவனம் மற்றும் இந்திய கடல் சார் பல்கலைக்கழகம் நிறுவனங்களுடன் இணைந்து கொற்கை மற்றும் சங்க கால பாண்டியர்களின் துறைமுகமான அழகன்குளம் ஆகிய பகுதிகளில் 65 லட்சம் ரூபாய் செலவில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும், கீழடியில் திறந்தவெளி அரங்கு அமைக்க 17 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்தார்.