• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

ByP.Kavitha Kumar

Mar 5, 2025

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கேற்ப அடுத்த ஆண்டு (2026) மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இது மக்கள் தொகை உயர்வைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 31 ஆக குறையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், மக்கள் தொகை உயர்வைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கு மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 5) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10வது தளத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதாக அதிமுக, காங்கிரஸ், விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. அதேசமயம், பாஜக, நாம் தமிழா், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளன.. தவெக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக ஒவ்வொரு கட்சியின் சாா்பிலும் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட உள்ளது. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் அரசின் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. மேலும், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் சாா்பில் டெல்லி சென்று தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை விளக்கவும் அரசின் சாா்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது