• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் முதல்வர் திறந்து வைத்தார்…

ByKalamegam Viswanathan

Jan 24, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..,

வீரர்களும், தீரர்களும் வாழும் மதுரை மண்ணில், வீரர்கள் ஆடும் விளையாட்டான ஏறுதழுவுதல் அரங்க திறப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு , மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே! உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே! தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே, வீரம் செறிந்த காளைகளை வளர்த்த குடும்பத்தினர்களே! காளைகளை தழுவ இருக்கும் இளங்காளையர்களே,
பத்திரிகை மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே!
அனைவருக்கும் வணக்கம்.
வீரதீர விளையாட்டு களத்தை திறந்து வைக்க வந்திருக்கிறேன். மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால், தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டு தோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.
தமிழர் பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதுவும், தமிழினத் தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுகிற ஆண்டில், அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு!
பல்லாயிரம் ஆண்டு பெருமை கொண்ட நம்முடைய தமிழினம் கொண்டாடும் ஏறு தழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம் பெறுவது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை!
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து, மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக, மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை இந்த மதுரையில் ஏற்படுத்தியிருக்கோம். ஒன்று, தமிழினத்தினுடைய பழமையை சொல்கின்ற கீழடி அருங்காட்சியகம், மதுரைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது, கலைஞரின் பெயரால் மாபெரும் நூலகம் பிரமாண்டமாக மதுரை மாநகரில் அறிவு மாளிகையாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது மூன்றவதாக, இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதை சொல்லுகின்ற நேரத்தில், 2015-ஆம் ஆண்டு அறிவித்து, இன்றைக்கு வரைக்கும் மதுரைக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறதே, அது உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதுக்கு நான் பொறுப்பில்லை!


இந்த அரங்கத்தை கம்பீரமாகவும், அழகாகவும் அமைத்துக் கொடுத்த பொதுப்
பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பாராட்டுகிறேன். அவருடைய சாதனைப் பட்டியலில், இப்போது இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் சேர்ந்துவிட்டது.
சென்னையில், கலைஞர் நினைவகமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விழாவை மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார் நம்முடைய அமைச்சர் மூர்த்தி.
தை மாதம் பிறந்தாலே மாண்புமிகு மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார். கோட்டைக்கு கூட வராமல் ஜல்லிக்கட்டு மைதானத்திலேயே இருந்துவிடுவார். அந்தளவுக்கு ஏறுதழுவுதலை தனது உயிராகக் கருதக் கூடிய மூர்த்தியை நான் பாராட்டுகிறேன்.
இங்கே அமைந்திருக்கும் இந்த பண்பாட்டுச் சின்னம், தமிழினத்தின் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி! சிந்து சமவெளி காலத்து முத்திரைகளிலேயே திமில் காளைகள் இருக்கிறது. அதில் காளைகளின் நேர்கொண்ட பார்வையை நாம் பார்க்கலாம்.
பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த ஓவியங்களில், திரண்டு தொங்கும் தாடை, அகன்று வளைந்த கொம்பு கொண்ட காளைகள் இருக்கிறது! ஏன், கீழடியில் திமிலுள்ள காளையின் முழு எலும்புக் கூடு கிடைத்திருக்கிறது! முல்லை நில மக்களுடைய வீர விளையாட்டாக இருந்திருக்கிறது! பழந்தமிழ் இலக்கியங்களிலும் இதைப் பற்றி உயர்வாக பாடப்பட்டிருக்கிறது.
“எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்” என்று ஏறுதழுவுதல் காட்சியை நம்முடைய கண்முன்னே கொண்டு வருவது கலித்தொகை. தை மாதம் தொடங்கி பொங்கலுக்காக முதல் மூன்று நாள், அரசு கருவூலத்தை தவிர மற்ற பொது அலுவலகங்களை மூடவேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கவர்னர் அறிவித்திருக்கிறார்.


தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவர்களாக, அந்தக் காலத்து கவர்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் தை மாதம் ஏறுதழுவுதல் நடக்கும்போது அலங்காநல்லூரும், அவனியாபுரமும், பாலமேடும் உற்சாகத்தோடு காணப்படும்.
இந்த பண்பாட்டுத் திருவிழா உலகம் முழுவதும் பேசப்படும் என்று தான், இந்த அரங்கத்தை அமைக்கின்ற முடிவை எடுத்தோம். தலைவர் கலைஞருக்கு ஏறுதழுவதல் போட்டி மேல், தனி பாசம் உண்டு! அதனால்தான், தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமாக, ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார்.
1974-ஆம் ஆண்டு சனவரி மாதம் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்தியவர் கலைஞர். ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை 2006-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை செய்தபோது, பாதுகாப்பான முறையில் நாங்கள் நடத்துவோம் என்று உறுதி அளித்து, அனுமதியை பெற்றவர் தலைவர் கலைஞர். 2007-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதும், தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை வைத்து வாதாடியதும் போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் கழக ஆட்சியில்தான்.
ஆட்சி மாறியதும், 2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்தது. நம்முடைய இளைஞர்கள் சேர்ந்து, ‘மெரினா தமிழர் புரட்சி’ என்று சொல்கின்ற அளவிற்கு 2017-ல் மிகப்பெரிய மக்கள் போராட்டம் சென்னைக் கடற்கரையில் நடந்தது.
அமைதி வழியில், போராடியவர்கள் மேல் வன்முறையை ஏவி கூட்டத்தை கலைத்தது அன்றைக்கு இருந்த அதிமுக ஆட்சி. அவர்களே ஆட்டோக்களுக்கு தீ வைத்து கொளுத்தி, அந்த கொடுமையான காட்சியெல்லாம் அப்போது வெளியானது!

தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு, அதிமுக ஆட்சி அடிபணிந்தது. அதன் பிறகுதான் மீண்டும் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்துகிற நிலை உருவானது. ஆனாலும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அனுமதி தருகிறோம் என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடகம் ஆடியது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுதான் இருந்தது. அந்த வழக்கில், ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் என்ன சொன்னது தெரியுமா?
”ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாட்டுவண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும், கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை” என்று தெரிவித்தார்கள் ஒன்றிய அரசு தரப்பில். நமது திராவிட மாடல் அரசு நீதிமன்றத்தில் என்ன சொன்னது?
”ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு போட்டி இல்லை. அது உழவர்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்தது. போட்டிகளை பாதுகாப்பாக நடத்துகிறோம். காளைகளை நமது குடும்பங்கள் கவனத்தோடு வளர்க்கிறோம்” என்று அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைத்தோம். திராவிட மாடல் அரசின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பெற்றோம். இவ்வளவு தடைகளையும் தி.மு.க. அரசு உடைத்து எறிந்ததால்தான் இன்றைக்கு ஏறுதழுவுதல் போட்டி கம்பீரமாக நடக்கிறது. இந்த சாதனை வரலாற்றின் தொடர்ச்சியாக இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், காளைகள், ஏறுதழுவுதல் பற்றிய அருங்காட்சியகமும், நூலகமும் அமைக்கப்பட்டிருக்கிறது.
பல நூற்றாண்டிற்கு முந்தைய நூல்களும், ஓவியங்களும், புகைப்படங்களும் இங்கே இருக்கிறது. இதனை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அன்னை தமிழ் நிலத்துக்கு பேரறிஞர் அண்ணா “தமிழ்நாடு’ என பெயர் சூட்டினார். தமிழுக்கு ‘செம்மொழி’ தகுதி பெற்று தந்தார் தலைவர் கலைஞர். இன்றைக்கு தமிழர் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதலுக்கு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அரங்கம் அமைத்திருக்கிறோம் இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது, ”சாதிப் பிளவுகளும், மத வேறுபாடுகளும், தமிழர் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்துவோம்!”
இந்த அரங்கில், காளைகள் வீரமாக களம் இறங்கட்டும்! காளையர்கள் தீரமாக காளைகளை தழுவட்டும்! தமிழர்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு கண்டுகளிப்போம். என்றாரா. இந்த நிகழ்ச்சியில், அரசின் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.