நடிகர் அஜித்தின் 61ஆவது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் விரைவில் தொடங்கவுள்ளது. சில காட்சிகள் ஐதராபாத்திலும், சென்னை மவுண்ட் ரோடு போல ஐதராபாத்தில் செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஹீரோ மற்றும் வில்லன் என அஜித்துக்கு இரண்டுவிதமான கேரக்டர் உள்ளதாக சொல்லப்படும் நிலையில், இப்படத்துக்காக அஜித் 25 கிலோ எடை குறைக்கவுள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. மேலும், இப்படத்துக்கு வல்லமை எனத் தலைப்பு வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இக்கூட்டணியில் வெளியான முதல் படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இது- பாரதியாரின் புகழ்பெற்ற வரிகளான “நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை….” எனும் பாடலின் வரிகளை நினைவுபடுத்தின. அடுத்ததாக இக்கூட்டணியில் உருவான வலிமை எனும் படத்தலைப்பும், “வலிமை வலிமை என்று பாடுவோம் என்றும் வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்” என்ற பாரதியின் பாடலை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது.

தற்போது கூறப்படும் வல்லமை எனும் தலைப்பும், “வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” எனும் பாரதியாரின் புகழ்பெற்ற பாடல் வரிகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இந்தத் தலைப்பெல்லாம் பாரதியின் பாடல்களைப் பின்பற்றி வைக்கப்பட்டவையா அல்லது யதார்த்தமாக அமைந்தவையா என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்..