திருப்புவனம் பகுதியில் தற்காலிகமாக பாதுகாவலராக பணியாற்றிய மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (வயது 27), கோவில் வளாகத்தில் காணாமல் போன நகை வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

ஜூன் 27 ஆம் தேதி, கோவிலுக்கு வந்த நிக்கிதா என்ற பெண், தனது காரில் 9½ பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் இருந்ததாகக் கூறினார். அதை வைக்கப்பட்ட இடத்தில் காணவில்லை எனக் கூறி, அஜித்குமார் மீது திருட்டு புகார் அளித்தார். காவல் நிலையத்திலே விசாரிக்கப்பட்ட அஜித்குமார் குற்றத்தை மறுத்தார். இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டும், மறுநாளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மானாமதுரை உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் – கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, ராமச்சந்திரன், சங்கரமணிகண்டன் ஆகியோர் – சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க திருப்புவனம் காவல் நிலையம் சென்றனர். அங்கு, அஜித்குமாரை காவல் நிலையத்திலிருந்து அழைத்து சென்று தாங்கள் தனியாக விசாரித்தனர்.
விசாரணையின் போது, 27.06.2025 இரவு முதல் மற்றும் 28.06.2025 மாலை வரை மேற்படி தனிப்படையினர் 1.ராஜா. 2.ஆனந்த் 3.சங்கரமணிகண்டன் 4.பிரபு 5.கண்ணன் ஆகியோர்கள் அஜித்குமாரை ஒரு தோப்பில் வைத்து பின்னர் சம்பவ இடமான மேற்படி கோவில் அலுவகத்திற்க்கு பின்புறமுள்ள மாட்டு கொட்டத்தில் வைத்து திடீரென்று தங்களுக்கு ஏற்பட்ட கோபத்தினாலும் மற்றும் நகைகளை மீட்க வேண்டும் என்ற எண்ணத்திலும் மேற்படி தனிப்படை ஐந்து பேரும் பிளாஸ்டிக் பைப்பால் மாறி மாறி அடித்துள்ளனர். இதனால் அஜித்குமாருக்கு பல இடங்களில் வெளிப்படையான கண்ணிய காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அஜித்குமார் ஒத்துக்கொள்ளாமல், முரண்பட்ட பதில்கள் அளித்ததாகக் கூறிய போலீசார், கோபத்தில் அவரது மீது பிளாஸ்டிக் பைப் கொண்டு கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அஜித்குமாரை, முதலில் திருப்புவனம் அரசு மருத்துவமனை, பின்னர் சிவகங்கை மருத்துவமனை மற்றும் அதனுடன் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், 28.06.2025 அன்று காலை 11.15 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர் உறுதி செய்தார்.
திருட்டு வழக்கில் சந்தேகத்திற்குள்ளான நபரான அஜித்குமார் என்பவரை தன்னிச்சையாக தங்கள் பொறுப்பில் வைத்திருந்ததுடன் அஜித்குமார் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து தங்களை அலைகழிப்பு செய்வதாகவும் எண்ணி இவர்களுக்கு திடீரென்று ஏற்பட்ட கோபம் காரணமாகவும் மேலும் அஜித்குமாரை அடித்து உண்மையை வர வைக்கவேண்டும் என்ற ஆத்திரத்துடனும் மேலும் ஒருவரை மூர்க்கதனமாக தாக்கினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்தும் மேற்படி ஐந்து தனிப்படை காவலர்கள் சேர்ந்து அஜித்குமாரை தாக்கி அவருக்கு மரணத்தை ஏற்படுத்தி கொலைக்குற்றம் புரிந்துள்ளனர் என்பது எனது விசாரணையில் தெளிவாக தெரியவந்துள்ளது.








