• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஜூலை 4ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

Byவிஷா

Jun 28, 2025

வருகிற ஜூலை 4ஆம் தேதியன்று திமுக அரசுக்கு எதிராகவும், கும்பகோணம் மாநகராட்சியைக் கண்டித்தும் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், ஜுலை 4ந்தேதி (4.7.2025 வெள்ளிக் கிழம) காலை 9.30 மணி அளவில், கும்பகோணம் காந்தி பார்க் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக அரசு மற்றும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்குத் தேவைப்படும் எந்தவிதமான அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்தாமல், அவசர அவசரமாக 2021-ஆம் ஆண்டு கும்பகோணத்தை மாநகராட்சியாக அறிவித்தது திமுக அரசு.
ஏற்கெனவே, அதிக அளவு சொத்து வரியை செலுத்தி வந்த மக்களுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் வீட்டு வரி, வணிக வரி, தொழில் வரி என்று அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசு, பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிக்கு ஏற்ப அடிப்படை வசதிகளை நிறைவேற்றி உள்ளனவா என்று கும்பகோணம் மக்கள் திமுக அரசை கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து வருகின்றனர்.

மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. மாநகரம் முழுவதும் குப்பை கூளங்கள் அகற்றப்படுவதில்லை. வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவே செயல்படும் அம்மா உணவகங்களை பராமரிப்பதற்கு போதிய நிதியை ஒதுக்காததால், அம்மா உணவகங்களை நம்பியுள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் உள்ள பாதாள சாக்கடை பராமரிப்பு இல்லாமல், பம்பிங்க் செக்ஷன் சரியாக செயல்படாமல், 80 நபர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், வெறும் 30 நபர்கள் மட்டுமே பணிபுரிவதால், பராமரிப்புப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
சாக்கடை நீர் சாலைகளில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு பெருகியுள்ளது. கொசுத் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
தாராசுரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.
கும்பகோணம் மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள் சிதிலமடைந்த நிலையில், எந்தவிதமான பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அவைகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் கல்வி நிதி எங்கே செல்கிறது என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சிகளின் செயலற்ற நிர்வாகங்களை கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசைக் கண்டித்தும்; கும்பகோணம் மாநகராட்சியில் வசித்து வரும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும், சாலைகளை புதுப்பிக்காமலும், பாதாள சாக்கடைகளை பராமரிக்காமலும் பொதுமக்களை மிகுந்த சிரமப்படுத்தும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 4.7.2025 வெள்ளிக் கிழமை காலை 9.30 மணி அளவில், கும்பகோணம் காந்தி பார்க் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கட்சி அமைப்புச் செயலாளரும், அரசு தலைமை முன்னாள் கொறடாவுமான ஆர். மனோகரன் தலைமையிலும்; தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன், Ex.MP., கும்பகோணம் மாநகரக் கழகச் செயலாளர் ராம. ராமநாதன், Ex.MLA., கட்சி கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரதிமீனா P.S. சேகர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.