நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் இன்று நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியவுடன் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்செங்கோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தில் கலைஞருக்கு வெங்கல சிலை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக நகர மன்ற தலைவர் தனி தீர்மானம் நிறைவேற்றினார். இதனை அடுத்து அதிமுக நகர மன்ற உறுப்பினர் அம்மா பேரவை செயலாளர் இரண்டாவது வார்டு கார்த்திகேயன் பேசும்போது, திருச்செங்கோடு வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் புதிய புறநகர பேருந்து நிலையம் அமைய உள்ள இடம் வெகு தொலைவாக இருப்பதை அதிமுக எதிர்க்கிறது. அந்த இடம் அமைவது குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த நகர மன்ற தலைவர் இன்னும் முறையான இடம் முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை என்றும், இடம் தேர்வு குறித்து பரிசீலனையில் உள்ளது. அனைத்து தரப்பு வணிக மக்களையும் கலந்து ஆலோசித்த பிறகே இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தெரிவித்தார்.
புதிய பேருந்து நிலையம் ஆய்வு நிலையில் மட்டுமே உள்ளது புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் இருந்தால் மட்டுமே அந்த பேருந்து நிலையம் அமையும் என்று கூறினார்.
ஒண்ணாவது வார்டு கவுன்சிலர் மாதேஸ்வரன் பேசும்போது நகராட்சி கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என புகார் தெரிவித்தார். அதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எட்டாவது வார்டு கவுன்சிலர் தினேஷ் பேசும் போது, எட்டாவது வார்டில் தெருக்களுக்கு பெயர் பலகைகள் இல்லை என தெரிவித்தார். அதனை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பல நகர மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அனைத்து வசதிகளையும் நகராட்சியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செய்து தருவதாக நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தெரிவித்தார்.