சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில் அவருடன் வந்த அதிமுகவினர் வேட்பாளர் முகம் போல் மாஸ்க் அணிந்துகொண்டு நூதனமுறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சிவகங்கை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமும், பா.ஜ.க சார்பில் தேவநாதன் யாதவும் அதிமுக சார்பில் சேவியர் தாஸும் நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி என்பவர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதில் அனைத்து வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் சுற்று பயனம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மறவமங்களத்தை அடுத்துள்ள முடிகரை கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவருடன் வந்த கட்சி பிரமுகர்கள் அனைவரும் வேட்பாளர் சேவியர் தாஸை போன்றே மாஸ்க் அணிந்து பொது மக்களிடம் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உடனிருந்தார்.