• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

செங்கோட்டையன் முன்பு அதிமுகவினர் அடிதடி- சேர்கள் பறந்தன!

ByP.Kavitha Kumar

Mar 5, 2025

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் முன்னிலையில் நிர்வாகி ஒருவரை கட்சியினர் அடித்து உதைத்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் சேர்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம், மொடச்சூர் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, மேட்டுபபாளையம் சட்டமன்ற உறுபபினர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.,

இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தியூர், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர். சட்டமன்ற தேர்தல், பூத் கமிட்டி அமைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது அந்தியூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி பிரவீன் என்பவர், கட்சியில் இருந்து நிர்வாகிகளுக்கு உரிய அழைப்பு விடுப்பதில்லை. எந்த தகவலும் எங்களுக்கு சொல்லப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து அவரை மேடைக்கு அழைத்து செங்கோட்டையன் பேசினார். அப்போது செங்கோட்டையன் ஆதரவாளர்கள் பிரவீனை சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அவர் விளக்கமளிக்கவிடாமல் வெளியே இழுத்துச் செல்ல அதிமுக நிர்வாகிகள் முற்பட்டனர். இதனால் அதிமுகவினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் சேர்களைக் கொண்டு தாக்கிக் கொண்னர். அப்போது சேர்களும் தூக்கி வீசப்பட்டது. இதனால் அங்கு அமளி துமளி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் பேசுகையில், அந்தியூரில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தான் இன்றைய பிரச்சினைக்காக ஒரு நபரை அனுப்பி வைத்தார். அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் தோல்வியடைவதற்கு ராஜா தான் காரணம். அதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது என்று பேசினார். செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.