அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இரண்டாக உடைந்த அதிமுக, பின்னர் பிரதமர் மோடியால் இணைந்து செயலாற்றியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும், ஓபிஎஸ் துணை முதல்வராகவும் இணைந்து அதிமுகவின் ஆட்சி காலத்தை நிறைவு செய்தனர். ஆனால், இருவருக்கும் இடையே இருந்து வந்த முட்டல் மோதல் காரணமாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதன் காரணமாக மீண்டும் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, கட்சி பிளவுபட்டது. ஆனால், கட்சியின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பொதுச்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்டி, தன்னை பொதுச்செயலாளராக நிலைநிறுத்திக்கொண்டார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்குகள் பல தள்ளுபடி செய்யப்பட்டன. அதுபோல சில வழக்குகள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் பொதுக்குழுவை கூட்டி, எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவை நிலைநாட்டி, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்துக்கும், அகில இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரித்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி நியமித்த நிர்வாகிகளையும் அங்கீகரித்து தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி ஈபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு இணையதளத்தில் பதிவேற்றியது. பொதுச்செயலாளராக ஈபிஎஸ், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஓபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.