உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் வரும் 24ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கான இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
தென் மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசு கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி செக்காணூரணியில் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் இணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி வரும் 24ஆம் தேதி செக்காணூரணியில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கான இடத்தை இன்று முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் சரவணன், பார்வட் ப்ளாக் கதிரவன், இ.மகேந்திரன், நீதிபதி உள்ளிட்டோர் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவுப்படி வரும் 24ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட அதிமுக மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் இணைந்து இந்த உண்ணாவிரத போராட்டம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது, மற்ற விவரங்களை உண்ணாவிரத போராட்டத்தின் போது தெரிவிக்கின்றோம் என பேட்டியளித்தார்.