• Mon. Apr 29th, 2024

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்

Byவிஷா

Feb 7, 2024

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வவாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்ட விதிகளின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்க வேண்டும். இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனால் அதிமுக உட்கட்சி தேர்தலை முறையாக நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த நிலையில், நிலுவையில் இருந்த இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து, இதுதொடர்பான தகவல்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால், அதில் தலையிட முடியாது என தெரிவித்தது. பின்னர் மனுதாரர் தரப்பில் கூறியதாவது, அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் சர்வாதிகார முறையில் நடைபெற்றதாக மனுதாரர் குற்றசாட்டியுள்ளார்.
எனவே, அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, அதிமுகவில் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து, அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும், இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறும் மனுதாரர் தரப்புக்கு ஐகோர்ட் நீதிபதி அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *