மகாத்மா ஊரக வளர்ச்சி வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடைபெற்ற 100 நாள் வேலைக்கான மூன்று மாத ஊதியம் இதுவரை கிராமப்புறங்களில் வழங்கப்படவில்லை. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 100 நாள் வேலை திட்ட நீதியை மத்திய அரசு வழங்காத காரணத்தால் கிராமப்புறங்களில் ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் முன்பு கையில் திருவோடு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவர் நீதி சோழன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சம்பள பாக்கி வழங்க வேண்டும், போதுமான நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை நகராட்சி பேரூராட்சிக்கு விரிவு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.