

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பட்ஜெட் மற்றும் வேளாண் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றின் தயாரிப்பு பணிகளில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. பட்ஜெட் தொடர்பாக தொழில்துறையினர், வர்த்தகர்கள், விவசாய அமைப்புகள் எல பலரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிதாக வேளாண் துறைக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய தங்களது எதிர்பார்ப்புகள் குறித்து விவசாயிகளும் அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்றூ அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் குடும்ப தலைவிக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இந்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றும் என்ற கேள்வி குடும்ப தலைவிகளின் மனதில் எழத் தொடங்கியது. தற்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர்கள் அனைவரும் பதவியேற்ற நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாகவும் இதற்கான அறிவிப்பு இம்மாதமே வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
