தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், தேவைக்கேற்ப கூடுதலாக 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன. அரசு பள்ளிகளிலும் பல இடங்களில் காலி பணியிடங்கள் உள்ளதால் மாணவர்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசை நோக்கி எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவைக்கேற்ப 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில்,
“தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவரப்படி மேற்கொள்ளப்பட்ட பணியாளர் நிர்ணயத்தில் உபரியாக 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டன. அவை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யப்பட்டன. இதற்கிடையே 11, 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வழங்கக் கோரி சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் கருத்துருக்கள் சமர்பிக்கப்பட்டன.
அதையேற்று மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தொகுப்பில் இருந்து 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
அதன்படி ஆங்கிலம் – 2, கணிதம் – 6, வேதியியல் – 4, தாவரவியல் – 3, வணிகவியல் – 9 பணியிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து முறையாக பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
