புதுச்சேரி கொரோனா மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து படக்காட்சி மூலம் ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:- 3-வது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும்.
இன்று முதல் முககவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக சித்தா, இயற்கை மருத்துவ முறையை கையாள வேண்டும்.15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் துரிதப்படுத்த வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை உடனடியாக இயக்க வேண்டும், நடமாடும் பல்ஸ் ஆக்சி மீட்டர் வாகனம், நடமாடும் பிராணவாயு வாகனம் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். இது தொடர்பாக தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
கொரோனா நோய் பரவல் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளைக் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள், ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்.மக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், அனைத்து அரசுத் துறைகளையும் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பு செயலர் புனித மேரி எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவர்.
அதேபோல தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒப்பந்த ஊழியர்களும் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படுவர். வரும் 7ம் தேதிக்குள் 100 சதவீத தடுப்பூசி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் கட்டாயம் முகக்கவசம அணிய வேண்டும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.