
‘கடைசி விவசாயி’ திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பினால் பலரது பாராட்டையும் பெற்றவர், ரேச்சல் ரெபேக்கா. அடிப்படையில் ஆயுர்வேத மருத்துவரான இவர், நடிப்பின் மீதுள்ள காதலால் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார்.
கடைசி விவசாயி படத்தில் தனது பங்களிப்பு குறித்து அவர் கூறுகையில், மணிகண்டன் சார் எனது நண்பர். அவரிடம் எனது சினிமா ஆசை குறித்து கூறியிருந்தேன்! அவர் இந்தப் படம் வந்தப்போது என் ஞாபகம் வந்து என்னை அழைத்தார். ஆரம்பத்திலேயே இது முக்கியமான கதாபாத்திரம்னு தெரியும். நடிப்புன்னா என்னன்னு மட்டும் இல்லாம ஒரு படம்னா எப்படி இருக்கும் என்பதை ஆரம்பம் முதல் இறுதி வரை அத்தனை அழகாக என்னிடம் சொன்னார்!
‘கடைசி விவசாயி’ படத்தில் நீதிபதி கேரக்டரில் நடிச்சதனால அந்த ஊர் மக்கள் என்னை ஜட்ஜம்மான்னு தான் கூப்பிடுவாங்க. இப்ப உசிலம்பட்டியில் எனக்கு ஒரு சொந்தமே உருவாகியிருக்கு. அந்தப் படத்தில் வர்ற தாத்தா நிஜத்திலும் என்னைப் பேத்தி மாதிரி தான் கவனிச்சிகிட்டார். எதுக்கு சென்னைக்கு போற.. இங்கேயே இரு.. மாட்டை மேய்ச்சுகிட்டு பால் கறந்துகிட்டு இங்கேயே இருந்துடு. இதுக்கு மேல என்ன வேணும்னு அத்தனை யதார்த்தமா என்கிட்ட பேசிட்டு இருப்பார். அவருக்கு உடல்நிலை சரியில்லைங்கிறதை கேள்விபட்டதுமே கொரோனா லாக்டவுன் எல்லாம் போடுறதுக்கு முன்னாடி அவரை நேர்ல போய் பார்த்துப் பேசிட்டு தான் வந்தேன்.கடைசியா அவரைச் சந்திச்சேன் என்கிற மன திருப்தி எனக்கு இருக்கு. படம் ரிலீஸாகிற நேரத்தில் அவர் இல்லைங்கிறது வருத்தமா இருந்தாலும் என்னை பொறுத்தவரை அந்தப் படத்தில் யாரும் நடிக்கவே இல்லைங்க. எல்லாருமே வாழ்ந்தாங்க. அதுதான் உண்மை.
உசிலம்பட்டியில் அந்த ஊர் மக்களோட சேர்ந்து உட்கார்ந்து படம் பார்க்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. எல்லோரும் திருவிழாவுக்கு போகிற மாதிரி புடவை, பூன்னு குடும்பத்தோடு வந்து படம் பார்த்தாங்க. முதல் சீன் தாத்தா வந்ததுமே எல்லாரும் கைத்தட்டி, விசில் அடிச்சு கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க.படம் பார்த்துட்டு சீனு ராமசாமி சாரும், மிஷ்கின் சாரும் பாராட்டினாங்க. மிஷ்கின் சார், ‘ ஒரு அழகான பொண்ணு முகத்துல குங்குமப் பொட்டு எவ்வளவு அழகா இருக்குமோ அப்படி இந்தப் படத்தில் உங்க கதாபாத்திரம் அவ்வளவு அழகா இருந்துச்சு.. ரொம்ப நிறைவா நடிச்சிருக்கீங்க’ன்னு சொன்னார்.
