• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அருப்புக்கோட்டை கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா

Byவிஷா

Jun 28, 2025

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் அமைந்துள்ள அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோவிலுக்கு நடிகை திரிஷா இயந்திர யானையை பரிசாக வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அஷ்டலிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் மற்றும் அஷ்டபுஜ ஆதிசேஷ வராகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இக்கோயிலுக்கு இயந்திர யானை ஒன்றை நடிகை திரிஷா மற்றும் சென்னையைச் சேர்ந்த பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா என்ற தன்னார்வ அமைப்பினர் அன்பளிப்பாக வழங்கினர். இந்த இயந்திர யானைக்கு “கஜா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நிஜ யானையைப் போலவே தோற்றமளிக்கும் இந்த இயந்திர யானை, தனது பெரிய காதுகளையும், தும்பிக்கை, வால் போன்றவற்றையும் ஆட்டுகிறது. தும்பிக்கையால் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும், ஆசீர்வாதம் செய்வதும் கூடுதல் சிறப்பாகும். கோயிலுக்கு இயந்திர யானையை வழங்கும் விழா அருப்புக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. டிஎஸ்பி மதிவாணன் இயந்திர யானையை வழங்கி, அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். பக்தர்கள் பலரும் இயந்திர யானையைப் பார்த்து வியந்தனர்.
இதுகுறித்து பீப்புல் ஃபார் கேட்டில் இன் இந்தியா குழுவினர் கூறும்போது,
“2023-ம் ஆண்டு இரிஞ்சாடப்பில்லி ராமன் என்று பெயரிடப்பட்ட உலகின் முதல் இயந்திர யானையை கேரளாவில் உள்ள கோயிலுக்கு வழங்கினோம். தற்போது தமிழகத்தில் முதல்முறையாக அருப்புக்கோட்டையில் இயந்திர யானை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தயாரிக்கப்பட்ட இந்த யானையின் ரூ.6 லட்சம். கோயில் சடங்குகளில் பங்கேற்க யானை தயாராக உள்ளது.
இது உயிருள்ள நிஜ யானைகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, மனிதாபிமான மாற்றாகத் திகழும். தமிழகத்தில் 29 கோயில்களில் யானைகள் உள்ளன. பல இடங்களில் அவை துன்புறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. திருச்செந்தூரில்கூட 2 பாகன்களை யானை கொன்றுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கவும் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.