சபரிமலை ஐயப்பன் கோயிலில் தனது நண்பர் மம்முட்டி பெயரில் நடிகர் மோகன்லால் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு நடிகர் மோகன்லால் இருமுடிகட்டி நேற்று சாமி தரிசனம் செய்தார். நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் உருவான ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ளார். இப்படம் வெற்றி பெறுவதற்காக நடிகர் மோகன்லால் ஐயப்பன் கோயிலில் சாமி தரினம் செய்தார் என்று கூறப்பட்டது.
ஆனால், தனது நீண்ட கால நண்பரான நடிகர் மம்முட்டி பெயரில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மோகன்லால் அர்ச்சனை செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. தனது மனைவி சுசித்ரா மற்றும் நடிகர் மம்முட்டி (முகமது குட்டி) ஆகியோர் பெயரில் நடிகர் மோகன்லால் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது வெளியாக வைரலாகி வருகிறது. அத்துடன் அர்ச்சனை செய்த ரசீதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் மம்முட்டி ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் பெயரில் நடிகர் மோகன்லால் சபரிமலையில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியுள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது