• Wed. Mar 22nd, 2023

உலகின் சுறுசுறுப்பான உயிரினங்கள்..!

Byவிஷா

Feb 3, 2023

உலகின் சுறுசுறுப்பான உயிரினங்கள் எவை என்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்கான கட்டுரைதான் இது.
நம்மைவிட உயிரினங்களே சுறு சுறுப்பானவை தெரியுமா? எறும்பு ஓரிடத்தில் நின்று பார்த்திருக்கிறீர்களா? துறு துறுவெனத்தானே இருக்கும். எறும்பைப்போலவே இன்னும் சில உயிரினங்களும் அதிக சுறு சுறுப்பானவையாக இருகின்றன. எவை அவை என்பதை பார்ப்போமா?

தேனீக்கள்:
சுறு சுறுப்பில் முதலிடத்தில் இருப்பவை தேனீக்கள்தான்.இவைகளில் வேலைக்காரத் தேனீக்கள் ஓய்வே இல்லாமல் உழைக்கின்றன.தட்பவெப்ப நிலை மாறுபாடுகள் இருந்தாலும் அதற்கேற்றவாறு தம் பணியை அமைத்துக் கொள்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு 10 கோடி டாலர்களை சம்பாதித்து கொடுக்கின்றன என்றால் அதன் உழைப்பைப் பார்த்துக்கொள்ளுங்களேன்.
பென்குயின்கள்:
இரண்டாமிடத்தில் இருப்பவை பென்குயின்கள்.அண்டார்ட்டிக் கடல்வாழ் உயிரினமான பென்குயின்களின் பெண் இனத்தைச் சேர்ந்தவை, கடற்கரையிலிருந்து ஏறத்தாழ 80 கிலோ மீட்டர்கள் தாண்டிச் சென்று தனக்குப் பொருத்தமான பகுதியில் முட்டையிடுகின்றன.பின்னர் அதனை ஆண் பென்குயின்களிடம் விட்டுவிட்டுப் போய்விடுமாம்.ஆண் பென்குயின்கள் அந்த முட்டை மீது 64 நாட்கள் அமர்ந்து உண்ணாமல் (ஆமாங்க…64 நாட்களும் சாப்பிடாதாம்) அடைகாக்கின்றன.அந்தக் காலகட்டத்தில் பெண் பென்குயின்களே இரைதேடிச் சேகரிக்கின்றன. முட்டை பொரிந்து குஞ்சு வெளிவந்தவுடன் அந்த சின்னஞ்சிறு பென்குயின் தனது தேவையை தானே பூர்த்தி செய்துகொள்ளுமாம்.


மண்புழு:
அடுத்த இடத்தில் இருப்பது மண்புழு.இயற்கை விவசாயி என்ற பெயர் பெற்ற இது, எல்லா வகை மண்களிலும் இல்லாவிட்டாலும்,இவை வாழும் மண் வளமான மண் ஆகும். 3 சதுர அடிப் பரப்பளவு நிலத்தில் 300 மண்புழுக்கள் வாழுகின்றன. மண் புழுக்கள் மண்ணைத் துளையிடுவதால் அந்த ஓட்டைக்குள் காற்றும், நீரும் சென்று மண்ணை வளப்படுத்துகின்றன. இவை வெளியேற்றும் கழிவுகளில் கால்சியம்,நைட்ரோஜன் உள்ளிட்ட சத்துகள் மண்ணிற்குக் கிடைக்கின்றன.
கரையான்கள்:
நான்காமிடத்தில் இருப்பவை கரையான்கள். மரத்தில் உள்ள செல்லுலோஸ்களை உண்டு வாழ்பவை. ஒரு சில மணி நேரங்களிலேயே பல அடி தூரம் மரங்களை அரித்துவிடும் சுறு சுறுப்பானவை.


கிளீனர்ராஸ் மீன்:
அடுத்த இடத்தில் இருப்பது ஒருவகை மீன். அதனை களீனர்ராஸ் என்று கூறுகிறார்கள். நாம் தூய்மைப்படுத்தும் மீன் என்று சொல்லலாம்.இது எந்நேரமும் நீந்திக்கொண்டே இருக்கும். பவளப்பாறை எனப்படும் கடல் உயிரினம் மற்றும் பெரிய வகை மீன்களின் உடலில் உள்ள அழுக்குகளைச் சுத்தப்படுத்தும். அதாவது அந்த அழுக்குகளே இதன் உணவு ஆகும்.தன் இனமான கடல் வாழ் உயிரினங்களைச் சுத்தப்படுத்தி இந்த மீன்கள் உயிர் வாழ்கின்றன.
போவர் பறவை:
ஆறாம் இடத்தில் இருப்பது போவர் பறவை. இது ஒரு வித்தியாசமான பறவை.தன் இன விருத்திக்காக மட்டுமே கூடுகட்டுவதுதான் பறவைகளின் இயல்பு. ஆனால்,இந்த போவர் பறவை தனக்காக் கூடுகட்டுகிறது. தன்னுடைய ஆசைக்காக அழகிய முறையில் வடிவமைத்துக் கட்டுகிறது. அதுவும் வழக்கமாக பறவைகள் பயன்படுத்தும் குச்சிகளால் அல்லாமல்,வண்ணக் கூழாங்கற்கள், பூக்கள், புதிய வழவழப்பான மரத்துண்டுகள், சிப்பிகள் என வித்தியாசமான பொருள்களினால் கூடு கட்டுகிறது. எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் தனித்துத் தெரிவது போல கண்களை ஈர்க்கும் வகையில் அந்தக் கூட்டைக் கட்டுகிறது. கூடு கட்டிவிட்டு அதன் அருகில் நின்று ஒரு ஆட்டம் போடுமாம். அந்த ஆட்டத்தில் மயங்கி பெண் பறவை இதனைத்தேடி வருமாம்.
ஆப்பிரிக்க காட்டு நாய்:
அடுத்த இடத்தில் இருப்பது ஆப்பிரிக்க காட்டு நாய். உயிரின சமன்மைக்கு உதவும் விலங்கு இது.செழிப்பான விலங்குகளை வேட்டையாடவே எல்லா விலங்குகளும் விரும்பும். ஆனால்,ஆப்பிரிக்க காட்டு நாய் அப்படி அல்ல் நோயாளி விலங்குகள்,சத்து இல்லாத மெலிந்த விலங்குகள்,காயம் பட்ட விலங்குகள் என மற்ற வேட்டை விலங்குகள் விரும்பாதவற்றை வேட்டையாடி உண்பது இதன் குணம்.மேலும், தனியே சென்று வேட்டை யாடாமல், கூட்டமாகச் சென்று இரண்டு பிரிவுகளாக வேட்டையாடுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை வேட்டைக்குச் செல்லும் இவை பெரும்பாலும் வெற்றியுடனே திரும்புகின்றன. அதுமட்டுமல்ல, தனித்து உண்ணாமல் தன் கூட்டத்துடன் சேர்ந்து உண்பது இதன் தனித்தன்மை.
பெண் சிங்கங்கள்:
எட்டாம் இடத்தில் இருப்பவை பெண் சிங்கங்கள்.விலங்குகளிலேயே வேட்டையாடும் பெண் விலங்கு இந்த பெண் சிங்கங்களே ஆகும். இரவில் சென்று வேட்டையாடும் இயல்புடைய இவை, 100 அடிக்கு அப்பால் இருக்கும் தன்னுடைய வேட்டைப்பொருளைக் கண்டுபிடித்துவிடும் ஆற்றல் உடையவை. தன் குட்டிகளை மட்டுமல்லாமல், பிற சிங்கங்களின் குட்டிகளையும் அரவணைத்துக் காக்கும் குணமுடையவை. ஆண் சிங்கங்கள் தன் குடும்பத்தைக் காக்கும் வேலையை மட்டுமே செய்கின்றன. இந்தப் பெண் சிங்கங்களே மற்ற எல்லா வேலையையும் செய்கின்றன.


நீர்நாய்:
அடுத்த இடத்தில் நீர்நாய் இருக்கிறது. விலங்குகளின் பொறியாளர் எனப் பெயர் பெற்ற இந்த நீர்நாய், ஆற்று நீரைத்தடுத்து தனக்கென ஒரு இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்கிறது. கோடைக்காலத்தில் மண்ணையும் மரத்துண்டுகளையும் சேகரித்து ஆற்று ஓரங்களில் அணைபோல ஒரு தங்குமிடத்தை அமைக்கும். சாய்ந்து கிடக்கும் மரங்களில் தன் கூரிய பற்களால் துண்டுகளாக வெட்டி உணவுக்காக எடுத்துக்கொள்கிறது. இது கட்டும் இருப்பிடத்தில் தான் மட்டுமல்லாது வாத்து போன்ற சில உயிரினங்களும் அதில் வசிக்க வாய்ப்பாகிறதாம்.


எறும்பு:
பத்தாவது இடத்தில் இருக்கும் சுறு சுறு உயிரினம் எறும்பு. ஒரு தொழிற்சாலைபோல இயங்குவது எறும்புப்புற்றுதான். எந்நேரமும் உழைத்துக்கொண்டே இருக்கும் எறும்புகள் மண்ணுக்குள் காற்று நுழையத் துளையிடும் முக்கிய வேலையைச் செய்கின்றன. பெண் எறும்புக்கு முட்டையிடுவது மட்டுமே வேலை. இந்தப் பெண் எறும்புகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும்.ஆனால்,ஆண் எறும்புகள் அவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ்வதில்லை. எறும்புகள் தமக்குள் தம் கூட்டு வாழ்க்கைக்கான வேலைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. உணவுதேடுதல், பாதுகாத்தல் என ஒவ்வொரு வேலையையும் பிரித்துக் கொண்டு செய்கின்றன.
இந்த உயிரினங்களைப் போன்று நாமும் சுறுசுறுப்பாக இயங்கினால் எந்த நோயும் நம்மை அண்டாது. முயற்சித்துப் பார்ப்போமா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *