• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் மதநல்லிணக்கத்தைக் காக்க நடவடிக்கை – மதுரை ஆட்சியர் சங்கீதா அறிக்கை

ByP.Kavitha Kumar

Feb 6, 2025

திருப்பரங்குன்றத்தில் பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 04.12.2024 அன்று மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோயில் தெருவில் புதியதாக மலை மேல் உள்ள தர்காவில் கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்ற வாசகம் பொருந்திய அறிவிப்பு பலகையினை தர்கா மேனேஜிங் டிரஸ்டியினரால் வைக்கப்பட்டுள்ளதாக, திருக்கோயில் மூலம் திருப்பரங்குன்றம் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது, அதன் அடிப்படையில் அந்த அறிவிப்பு பலகை நீக்கம் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் 25.12.2024 அன்று காலை 09.00 மணியளவில் கந்தூரி (ஆடு பலியிடுதல்) கொடுப்பதற்கு 5 நபர்கள் மலை ஏற சென்ற போது அங்கு பணியிலிருந்த காவலர்கள் தடுத்ததால் கந்தூரி கொடுப்பதற்கு அனுமதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து இஸ்லாமிய சமூகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முறையிட்டதன்பேரில், கடந்த 31.12.2024- தேதி திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் அமைதிப்பேச்சு வார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் ஏற்கெனவே கடந்த ஆண்டுகளில் நடைமுறையிலுள்ள வழிபாட்டு முறைகளை இந்த ஆண்டிலும் தொடர வேண்டும் என்றும் மலை மீது கந்தூரி கொடுக்கும் நடைமுறை தொடர்பாக, போதிய ஆதார ஆவணங்களை தர்கா தரப்பினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகியோரால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால் இந்நேர்வு தொடர்பாக உரிய நீதிமன்றத்தின் மூலமாக பரிகாரம் தேடிக்கொள்ளவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட்டது. ஆனால், தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா மற்றும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தீர்மானத்தில் கையொப்பம் செய்யாமல் சென்று விட்டனர்.

தொடர்ந்து கடந்த 18.01.2025 அன்று சந்தனக்கூடு விழாவினை முன்னிட்டு, திருப்பரங்குன்றம், ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் மலையின் மீது உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில்ந்தூ கந்தூரி (ஆடு பலியிடுவதற்கு) கொடுப்பதற்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது. எனினும், சில நபர்கள் கந்தூரி கொடுக்க முற்பட்டனர். மேற்கண்ட நபர்கள் பெரிய ரதவீதியில் வந்த போது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்து வருகிறது.

அதே போல் கடந்த 18.01.2025 அன்று இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 200 நபர்கள், அதன் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன், தலைமையில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்சியினருடன் திருப்பரங்குன்றம் எஸ்.பி.மஹாலில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு, அனுமதி பெறாமல், திருப்பரங்குன்றம் கோயில் வந்து திரும்பியபோது, அவர்களுக்கு எதிராக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்து வருகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 27.01.2025 அன்று திருப்பரங்குன்றம் அனைத்து கட்சி நிர்வாகிகள் என்று திருப்பரங்குன்றம் கிராமத்தைச் சார்ந்த 11 நபர்கள் தங்களது கிராமத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதாகவும், வெளி நபர்கள் யாரும் தங்களது ஊரில் நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகள் குறித்து தலையீடு செய்யாமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.

அதன் அடிப்படையில், திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 30.01.2025 அன்று உள்ளூரைச் சேர்ந்த நபர்களை (சிபிஎம். திமுக. அதிமுக. காங்கிரஸ். மதிமுக. இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், மனித நேய மக்கள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள்) அழைத்து ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் “திருப்பரங்குன்றம் நகரை சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை (தனிப்பட்ட முறையில் கந்தூரி கொடுப்பதை) தொடர்ந்து பின்பற்றவும். அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என அனைவரும் (அதிமு.க பிரதிநிதி மட்டும் கையொப்பம் இட மறுப்பு தெரிவித்து சென்றுவிட்டார்) தெரிவித்துக் கொள்கிறோம்” என எழுத்துபூர்வமாக தெரிவித்தனர்.

இந்த சூழலில் கடந்த 04.02.2025 அன்று இந்து முன்னணி அமைப்பினர் “மலையைக் காப்போம். திருப்பரங்குன்றம் புனிதம் காப்போம்” என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரிய மனுவிற்கு காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது சமூகத்தை அழைத்து, மலையைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு செய்திகளை பதிவேற்றி வந்தனர்.

இந்து முன்னணி அமைப்பினர். இந்துக்கள் மற்றும் இதர ஆதரவு அமைப்புகளையும் தென் மாவட்டங்களான விருதுநகர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகியவற்றிலிருந்தும், மதுரை மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நபர்களையும் ஒன்று திரட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணி சுவாமி கோயில் முன்பு உள்ள 16 கால் மண்டபத்தின் அருகே ஆர்பாட்டம் செய்ய ஆயத்தம் செய்தனர். எனவே, மத நல்லிணக்கத்தை பேணும் பொருட்டும், அசாதாரண சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது என்பதாலும், பொது அமைதியினை பாதுகாக்கும் பொருட்டும். மனித வாழ்வு, பொதுப் பாதுகாப்பு மற்றும் அமைதியை கருத்தில் கொண்டும். மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளிநபர்கள் யாரும் பிரவேசிக்காத வகையில் 03.02.2025 காலை 06.00 மணி முதல் 04.02.2025 இரவு 12.00 மணி வரை இரண்டு நாட்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போராட்டம் நடத்த அனுமதி மறுத்ததை எதிர்த்து சில இந்து அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் உத்தரவில் பழங்காநத்தம் சந்திப்பில் 04.02.2025 மாலை 05.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை ஆர்பாட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஆர்பாட்டம் நடந்த இடத்திற்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டு, இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் தலைமையில் சுமார் 3000 நபர்கள் கலந்து கொண்டு, ஆர்பாட்டம் முடிந்து கலைந்து சென்றனர்.

திருப்பரங்குன்றம் கிராம பகுதியைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும், மதச்சார்பின்றியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், வெளியூரைச் சேர்ந்த இரு தரப்பைச் சேர்ந்த அமைப்பினர்கள் அப்பகுதி மக்களுடைய பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிப்பதை கட்டுப்படுத்தவும், பொது அமைதி மற்றும் மத நல்லிணகத்தை பேணவும், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.