• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு

Byவிஷா

Mar 2, 2024

கடந்தாண்டு முதல் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனை விலையை ஆவின் விலையை உயர்த்திய நிலையில், தற்போது நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலையையும் உயர்த்தப் போவதாக அறிவித்திருப்பது பால் முகவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆவின் நிறுவனம் சார்பில் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம்கள், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்விலையை அவ்வப்போது நெய், பால் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி வருவது வழக்கம். இந்நிலையில், ஐஸ்கிரீம் விலையும் உயர்த்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, இனி ஆவின் சாகோபர் விலை 65 மில்லி 20 ரூபாயில் இருந்து 25 ரூபாயாக அதிகரிக்கிறது. பால் – வெண்ணிலா 125 மில்லி ரூபாய் 28-ல் இருந்து ரூபாய் 30 ஆக விற்கப்பட உள்ளது. கிளாசிக் கோன் – வெண்ணிலா 100 மில்லி ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 35 ஆக அதிகரிக்கப்படுகிறது. கிளாசிக் கோன் 100 மில்லி ரூபாய் 30ல் இருந்து ரூபாய் 35 ஆக அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் நாளை (03.03.2024) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இது போன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
அத்துடன் பால்வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்தி விட்டு களத்தில் இறங்கி ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி எச்சரித்துள்ளார்.