கோவை மாவட்டம், தடாகம் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மதுக்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், கணுவாய், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உலா வருகின்றன. அவ்வாறு வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி சொல்வதும், கடைகளை சேதப்படுத்தி செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக, கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஷெட் அமைத்து தங்கும் வடமாநில தொழிலாளிகள் பயன்படுத்தும் ரேஷன் அரிசியை குறிவைத்து காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துகின்றன. மனிதர்களின் உணவுக்கு பழக்கப்படும் இந்த யானைகள் தொடர்ந்து குடியிருப்புகள், ரேஷன் கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளன.
ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள், பிளாஸ்டிக் குப்பைகள், மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பைக் கழிகளை கட்டுவது, விதிமுறைகளை மீறி யானை வழித்தடங்களில் வீடுகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை அமைக்கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் நேற்று நள்ளிரவில் ரேஷன் கடையை சேதப்படுத்தி உள்ளே இருந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சென்றுள்ளது. சத்தம் கேட்டு வந்த ஊர்மக்கள் பட்டாசு வெடித்தும், சப்தம் எழுப்பியும் யானைகளை விரட்டினர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதே கடையை காட்டு யானைகள் சேதப்படுத்தி சென்ற நிலையில், தற்போதும் வந்து சேதப்படுத்தி ரேஷன் பொருட்களை தின்று சென்றுள்ளது. அடிக்கடி இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்துவதாகவும், ரேசன் கடை, மளிகை கடைகளை சேதப்படுத்துவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, வனத் துறையினர் யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை தடாகம் பகுதியில் அச்சுறுத்தும் காட்டு யானை
