கடந்த 1992 ஆம் ஆண்டு திருப்பூரில் பெய்த கனமழையால் நொய்யல் நதிக்கரையில் இருந்த பல குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதில் தங்கள் உடமைகளை இழந்து சாலைக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தற்காலிகமாக குடி வைக்கப்பட்டனர்.

இடம் பெயர்ந்த 1008 குடும்பங்கள் பட்டா கேட்டு கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்காத நிலையில் நாளை திருப்பூர் வரும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் கூறுகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் தான் இங்கு குடி பெயர்ந்தோம் எனவும் இந்த இடம் மேய்ச்சல் புறம்போக்கு என்பது எங்களுக்கு தெரியாது எனவும் நாங்கள் குடிப்பெயர்ந்த இப் பகுதிக்கு அறிவொளி நகர் என்று பெயர் சூட்டியது அதிகாரிகள் தான் எனவும் பட்டா பெற்று தருவதாக மக்கள் பிரதிநிதிகள் வாக்குறுதி அளித்து 30 வருடங்களாக ஏமாற்றி வருவதாகவும் ஓட்டுக்காக மட்டுமே எங்களை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் பட்டா இல்லாததால் வங்கி கடன் உட்பட எந்த ஒரு சலுகையும் எங்களால் பெற முடியவில்லை எனவும் இரண்டு தலைமுறை கடந்தும் பட்டா கிடைக்காததால் அடுத்த தலைமுறையாவது பட்டா பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காக நாளை திருப்பூர் வரும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டும் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் தொடர்ச்சியாக எங்கள் பகுதியை புறக்கணித்தால் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.