• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!

Byவிஷா

Feb 8, 2023

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்தது என்றும் கூறப்படுகிறது.
விழுப்புரம் அருகே உள்ள எண்ணாயிரம் கிராமத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டபோது, சோழர் காலத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பம் கண்டறியப்பட்டது. இந்த எண்ணாயிரம் கிராமம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமம் ஆகும். இங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த அழகிய நரசிங்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் முதலாம் ராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய வேதக் கல்லூரி இயங்கி வந்திருக்கிறது.
சிறப்பு வாய்ந்த எண்ணாயிரம் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி மூர்த்தி குளம் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்தனர். விளை நிலங்களுக்கு நடுவே மரங்கள் புதர்கள் மண்டியிருக்கும் திட்டுப் போன்ற பகுதியில் தட்சிணாமூர்த்தி சிற்பம் காணப்படுகிறது. வலது காலை தொங்கவிட்டும், இடது காலை வலது காலின் மீது அமர்த்தியவாறும் அழகே உருவாக வீராசனத்தில் அமர்ந்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. நான்கு கரங்களுடனும் தலை அலங்காரத்துடனும் காட்சி அளிக்கிறார். இவரது காதுகள், கழுத்து, கை மற்றும் கால்களை அணிகலன்கள் அணி செய்கின்றன. மேலும் வலது கால் முயலகன் மீது அழுத்திய நிலையில் காணப்படுகிறது. இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.10-11ஆம் நூற்றாண்டு ஆகும். தட்சிணாமூர்த்தி சிற்பம் இருக்கும் பகுதியில் ஏற்கனவே சிவாலயம் இருந்து மறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆவுடையார் உள்ளிட்ட தடயங்கள் இப்போதும் இங்குக் காணப்படுகின்றன. இந்த நிலையில் சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிணாமூர்த்தி சிற்பத்தை உரிய முறையில் பாதுக்காக்க வேண்டும். இப்பகுதியில் புதைந்துள்ள வரலாற்றுத் தடயங்களை வெளி கொண்டுவர அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.